அமைச்சர் மீது ரூ.300 கோடி புகார் கூறிய தொழிலதிபர்கள் வீட்டில் அதிரடி... வருமானவரித்துறை சோதனை..!
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ரூ.300 கோடி நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ரூ.300 கோடி நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த, காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் புகாரின் பின்னணியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமைச்சர் வீரமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீது காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 12-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இல்லை என வாதிட்டார்.
உறுதிமொழி பத்திரம்’ தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 19-ம் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வேலூரில் உள்ள நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணிக்குத் தொடர்பில்லை. அவர், பதவியைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் அமைச்சர் மீது வழக்குத்தொடுத்த தொழிலதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை, வேலூர், விழுப்புரத்தில் திருமலா பால் நிறுவன அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.