வாலாஜா அருகே கன்டெய்னர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையில் இருந்து வேலூரை நோக்கி கன்டெய்னர் லாரி புறப்பட்டு நேற்றிரவு 6.50 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தது. பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலை நிரப்பிக் கொண்டு கன்டெய்னர் லாரியை சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு டிரைவர் கொண்டு செல்ல முயன்றார். 

அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இறந்தவர்களில் சிலரது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியதால் லாரியின் அடிப்பகுதியில் கார் சென்றதால் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர். இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் பலியானவர்கள் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  பனையூரை சேர்ந்த சாதிக் (40), அவரது மனைவி பர்வீன் (35), தந்தை அன்வர்கான் (70), தாய் அலம்பேகம் (65), மகன் மகமது பாஷா (15), உறவினர் அகமது பாஷா (60) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இந்த விபத்தால் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.