Veerappan does not wear Baniyan
சமூகநீதி மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுததுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி மாநாடு வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதன் நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17 ஆம் தேதியை மறக்க முடியாது மறக்கவும் கூடாது. காரணம் அது பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்த நாள் மட்டுமல்ல, தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பாட்டாளி சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தநாள் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30-வது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 17 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலையில் சமூகநீதி மாநாட்டை பா.ம.க. மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்தச் சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாநாடு தொடர்பாக பா.ம.க தொண்டர்களுக்கு 11 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் ராமதாஸ். அதில் சிங்கம், போர்வாள், அக்னி கலசம், வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது என்னும் உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுச் சமுதாய மக்கள் மனம் வருந்தும்படி சமுதாய கோஷங்களை எழுப்பக் கூடாது என்றும் பா.ம.க தொண்டர்களுக்கு ராமதாஸ் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
