திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் நூறு நாள் வேலை கேட்டு பல்வேரு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் சாந்தி வரவேற்றார்.

இதில், "மத்திய அரசு நூறு நாள் வேலையை உடனே வழங்க வேண்டும். கூலி ரூ.224 குறையாமல் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இடையங்குளத்தூர், செம்மாம்பாடி, விசாமங்கலம், வெளுகம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 217 பெண்கள் கோரிக்கை மனுக்களை ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் மோகனிடம் வழங்கினார்கள்.

இதேபோல 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ந்து வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஜெயராணி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் முனியம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், "100 நாள் வேலை திட்டத்தை அனைத்து குடும்பங்களுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். 

வேலை செய்த தொழிலாளிக்கு பாக்கியுள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.