ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.100 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார்.

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது விஜிலாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை சர்வதேச விமான நிலையம் அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெலுங்கு தேச கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில் அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதிக்கு வருகை வந்த அவர் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டினார். இந்த இடம் ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்டிருந்தாலும் தமிழக மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பயன்பெற உள்ளனர். 

குப்பம் தொகுதி முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி என்பதால் பல்வேறு நலத் திட்டங்களை அங்கு செய்து வருகிறார். மானிய விலையில் வீடுகள், குடிநீர் குழாய்கள், சிமென்ட் சாலைகள், பள்ளி கட்டிடங்களை அவர் திறந்து வைத்துள்ளார்.