தமிழக பள்ளி - கல்லூரிகளில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்வில் வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு, வங்கமொழி, உருது மொழி, மராத்தி மொழி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் சரியானதை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதற்கு வங்கமொழி என மனுதாரர் வீரமணி பதிலளித்திருந்தார்.

பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டிருப்பதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் தனக்கான ஆசிரியர் பணியிடத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணையில், வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் இயற்றப்பட்டதா? சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா? என பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வந்தே மாதரம் வங்கமொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் வாரம் ஒரு முறை இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

சமஸ்கிருதம், வங்க மொழிகளில் பாட விருப்பம் இல்லாபட்சத்தில் தமிழில் மொழிபெயர்த்தும் பாடலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இது மட்டுமல்லாது, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலை பாட விருப்பமில்லாதோர் மீது எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது எனவும், வந்தே மாதரம் பாடலை பாட கூறி அழுத்தம் தருவதால் தேசத்தின் மீதான வெறுப்பு அதிகரிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை தொடர்ந்த வீரமணி என்பவருக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.