சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை! இயக்கப்படும் நேரம், நிறுத்தும் இடங்கள்!
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே வரும் 31-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. ரயில்களின் நேரங்கள், நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே மற்றும் மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த இரண்டு ரயில்கள் இயக்கப்படும் நேரம் மற்றும் நின்று செல்லும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடையும். மீண்டும் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன.
அதேபோல் மதுரைரையில் இருந்து வந்தே பாரத் ரயில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும். மீண்டும் பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரையை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் உள்ளன.