திருப்பத்தூர் அருகே வந்தேபாரத் ரயிலில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிள் சுமார் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினர். தொடர் பழுது காரணமாக எரிச்சலடைந்த பயணிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கர்நடாக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் வந்தேபாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் 1.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 7.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தையும். அதன்படி நேற்று 1.10 மணிக்கு புறபப்பட்ட வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் திடீரென என்ஜின் பழுதாகி பாதி வழியில் நின்றது.
பழுது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பின்னர் ரயில் மீண்டும் புறப்பட்டது. ஆனால் சிறிது தூரத்திலேயே ரயில் மீண்டும் பழுதாகி நின்றது. மீண்டும் அதிகாரிகள் கோளாறை சரி செய்ய முற்பட்டனர். அப்போது நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக சென்றடைந்தது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
