பாஜக நிர்வாகியிடம் இருந்து சிக்கிய பணம்...வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் இல்லை- வானதி புது விளக்கம்
திமுக பணம் பட்டுவாடா வெளியே வராமல் இருக்க ஆட்களை செட்டப் செய்து பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பாஜகவிற்கு மக்களின் ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கோவை பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிவானந்தகாலணி ஆறுமுக்கு பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் ஆதரவு பாஜகவிற்கு உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறியவர் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்கள் அனைவரும் பிரதமர் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளதாகவும் நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளாதாக தெரிவித்தார்.
கோவையில் சிக்கியது யாருடைய பணம்
கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும் எனவும் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். இந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என தெரிவித்தார். 400 எம்.பி.க்களில் அண்ணாமலையும் ஒருவராக இருப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதனை தொடர்ந்து கோவையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் போது ஒருவர் கைது செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புவதாகவும் தெரிவித்தார்.
திமுக செட்டப் செய்த ஆட்கள்
பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை எனவும் திமுக,அதிமுக கட்சியினர் வெளிப்படையாக பணம் கொடுப்பதாகவும் இதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். திமுக பணம் பட்டுவாடா வெளியே வராமல் இருக்க ஆட்களை செட்டப் செய்து பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள் என்ற அவர் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை தான் மலரும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.