சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, ஜூன் 21 அல்லது 27ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. புதிய கலையரங்கம், லிஃப்ட் வசதி, விசாலமான வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளுவருக்கு நினைவுச் சின்னம் இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக, சென்னை நுங்கம்பாக்கம் – கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1976ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
5 ஏக்கர் பரப்பளவில் உருவான வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் ஆழித்தேரின் மாதிரி வடிவம் 128 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அந்தக் கல் தேரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 3,000 பேர் அமரக்கூடிய அரங்கம் ஒன்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளது. அங்கு 1300 குறள்களும் கற்பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
ரூ.80 கோடி செலவில் புனரைப்புப் பணிகள்:
சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, 2024 ஜனவரி முதல் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
270 தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கலையரங்கம், குறள்மணி மாடம், வளாகச் சுற்றுச் சுவர், தூண்கள், நுழைவாயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவரின் பிரம்மாண்ட படம்:
வள்ளுவர் கோட்டத்தின் கலையரங்க மேற்கூரையில் திருவள்ளுவரின் பிரம்மாண்ட படம் அமைய உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக லிஃப்ட் வசதி, விசாலமான வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம் போன்றை உருவாகி வருகின்றன.
மழைநீர் வடிகால் வசதி, 2 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேமிப்புத் தொட்டி, பேவர் பிளாக் நடைபாதை, செயற்கை நீரூற்று, ஒளி-ஒலி காட்சி ஆகியவற்றிற்கான பணிகள் முடிந்துள்ளன. பிரம்மாண்டமான தோரணவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
திறப்பு விழா எப்போது?
இந்நிலையில், புதுப்பொலிவு பெற்ற வள்ளுவர் கோட்டம் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது. வரும் ஜூன் 21 அல்லது 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்துவைப்பார் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று முதல் வள்ளுவர் கோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படும்.
