பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறியிருந்தார். இந்நிலையில், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி - ராமதாஸ் மோதல்

பாமக தலைவர் அன்புமணி இனி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி இனி தானே பாமக தலைவர் என ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு பாமக பொருளாளர் திலகபாமா பாமகவில் ஜனநாயகம் கொலை நடந்துள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம் என்று திலகபாமா தெரிவித்திருந்தார்.

திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்

இந்நிலையில், ராமதாஸை விமர்சித்த பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் ஆவேசமாக கூறியது மட்டுமல்லாமல் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர்.

இதையும் படிங்க: நேற்று முளைத்த காளான்! அரைவேக்காடு திலகபாமா! ராமதாஸை வசை பாடுவதுதா? பாமகவில் வெடித்த அடுத்த மோதல்!

பாமகவில் முற்றும் மோதல்

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது என வடிவேல் இராவணன் கூறியிருந்தார். இதனால் பாமகவில் மோதல் முற்றுகிறது என்ற செய்திகள் வெளியானது. இதனிடையே உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை, உயிரை தந்தேனும் காப்பேன் என வடிவேல் ராவணனின் காட்டமான அறிக்கையை தொடர்ந்து திலகபாமா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

 அன்புமணி சமாதானம்

இந்நிலையில் பாமகவின் பொதுச்செயலாளராக உள்ள வடிவேல் ராவணன் மற்றும் பொருளாளர் திலகபாமா இருவரும் பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு திடீரென சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு அரைமணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இருவரையும் அன்புமணி சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.