திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு: மலேசிய உலக தமிழ் மாநாட்டில் சலசலப்பு!
மலேசிய உலக தமிழ் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சலசலப்பு ஏற்பட்டது

மலேசியாவில் உள்ள உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில், 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது உரையாற்றிய அவர், தமிழ் தேசியம் பற்றி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், திருமாவளவனை ஒருமையில் பேசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்த முற்பட்டனர். இதையடுத்து, திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தமிழ் தேசியம் பற்றி திருமாவளவன் பேசியதற்கு மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருமையில் எதிர்ப்பு கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!
முன்னதாக, மாநாட்டில் பேசிய திருமாவளவன், “தமிழ்த் தேசியம் என்பது மொழி, இன உணர்வு மட்டுமல்ல. அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டம்.” என்றார். “மொழி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகம் இருந்துவிட முடியாதது. அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாததுதான். அவற்றைக் கடந்து தேசிய இனம் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மதம் அடையாளத்தை விட தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.” என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, மலேசியாவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திருமாவளவன் அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மலேசிய திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்று திருமாவளவன் உரையாற்றினார்.