பல்கலை., சிண்டிகேட் கூட்டங்கள்: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!
பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டங்கள் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்

தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆர்.என்.ரவி தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் செனட் மற்றும் சிண்டிகேட்களில் ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில்தான் நடைபெறுகின்றன. துறையின் முதன்மைச் செயலாளர் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்காமல், தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.” என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், “தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேர்மையான முறையில் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மேலும், பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர் பணியிடங்களும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இந்தப் பதவிகள் அனைத்தும் கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பல ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயர்கல்வி செயலாளரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என ஆளுநர் கூறுகிறார். ஆனால், பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக உள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் இல்லாமலேயே பல்வேறு கூட்டங்களை ஆளுநர் நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் அரசியல் செய்ய ஆளுநர் நினைப்பதாகவும், பல்கலைக் கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆளுநர் முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.
அருணாச்சலம் படம் பாணியில் சேட்டை செய்த குரங்கு... ருத்ராட்சம் இல்லை; ரூ.1 லட்சம் பணம்!
தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும். பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், மீன்வளப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா? அதே சிண்டிகேட் கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் அவர் நடத்தினார்? சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது?” என கேள்வி எழுப்பினார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது எனவும் ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்தார்.
ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே கூறியிருக்கிறார் என சுட்டிக்காட்டிய அமைச்சர் பொன்முடி, நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றார்.