அருணாச்சலம் படம் பாணியில் சேட்டை செய்த குரங்கு... ருத்ராட்சம் இல்லை; ரூ.1 லட்சம் பணம்!
ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை எடுத்து கொண்டு குரங்கு ஒன்று மரத்தின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படத்தில், குரங்கு ஒன்று ரஜினி கழுத்தில் இருந்து கீழே உருண்டு விழுந்த ருத்ராட்சத்தை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறிக் கொள்ளும். அந்த சீன் தான் படத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹாபாத்தில் ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் கொண்ட பையை குரங்கு ஒன்று எடுத்துக் கொண்டு மரத்தின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த குரங்கானது ஏதாவது உணவு கிடைக்குமே என்று தேடி வந்திருக்கலாம். ஆனால், அதன் கையில் பணம் இருக்கும் பை சிக்கவே, சற்று நேரத்தில் பணக்கார குரங்காகவே அது மாறி விட்டது என்று கிண்டலடிக்கின்றனர் இந்த காட்சிகளை நேரில் பார்த்தவர்கள்.
டெல்லியில் வசிக்கும் ஷரபத் ஹுசைன் என்ற நபர், உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹாபாத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சொத்துப்பதிவு விஷயமாக வந்துள்ளார். அவர் தனது இரு சக்கர வாகனத்தை மரத்தின் அடியில் நிறுத்தி வைத்து விட்டு, அருகே உள்ள பெஞ்சில் அமர்ந்து தனது கணக்குப்பதிவுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் தனது நடவடிக்கையில் மூழ்கியிருந்தபோது, சம்பவ இடத்துக்கு வந்த குரங்கு, அவரது மோட்டார் சைக்கிளில் உள்ள பைகளில் எதையோ தேட ஆரம்பித்தது. அப்போது, ஷரபத் ஹுசைன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் கொண்ட பையை கண்டுபிடித்த அந்த குரங்கு அதனை தூக்கிக் கொண்டு சட்டென்று எஸ்கேப் ஆகியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, பைக்கில் வந்திருந்த பணத்தை குரங்கு தூக்கிக் கொண்டு மாயமாகி விட்டத்தை உணர்ந்த ஷரபத் ஹுசைன், கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் பணப்பையுடன் குரங்கு மரத்தின் மீது அமர்ந்திருப்பதை கண்டு, அதன் கவனத்தை திசை திருப்பி, பணத்தை மீட்க முயற்சித்தனர். மேலும், அந்த குரங்கை அங்கிருந்தவர்கள் துரத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இறுதியாக, பணப்பையை அந்த குரங்கு சற்று தூரத்தில் போட்டு விட்டு சென்றது. இதையடுத்து, பணத்தை மீட்ட ஷரபத் ஹுசைன் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதுகுறித்து மாவடட் நிர்வாகம் கூறுகையில், “சஹாபாத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் தொல்லையை கருத்தில் கொண்டு, பிடித்து வனப்பகுதியில் விட தனிப்படை அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.
குரங்குகள் தொல்லையை சமாளிக்கும் வகையில், தாலுகா அளவில் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிகளில் விடப்படும் என்று ஷஹாபாத் துணை ஆட்சியர் அனில் குமார் தெரிவித்துள்ளார்.