பாஜகவில் இணைந்த மாஜி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு!
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினரை வரவேற்பதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. எனவே, கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி செய்து வருகிறது. மேலும், அனுபவமிக்க மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் குறிப்பாக, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இன்று இணைந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிமுகவை சேர்ந்தவர்கள். அதேபோல், காங்கிரஸில் இருந்து ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தேமுதிகவில் இருந்து ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுகவிலிருந்து ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி முறிந்துள்ளது. இருப்பினும், அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், இந்த இணைப்பானது நடந்துள்ளது. இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பாஜகவில் இன்று இணைந்தவர்களில் சிலர் 40 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களாகவும், சிலர் 20 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களாகவும் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினரை வரவேற்பதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த உலகின் மிகப்பெரிய கட்சியில் சேர்ந்த உங்களை வரவேற்கிறேன். இது பிரதமர் மோடியின் வளர்சியடைந்து வரும் புகழை காட்டுகிறது. தமிழ்நாடு, கேரளா மாநில ஆளுங்கட்சியினர் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மக்கள் பாஜகவுக்கு வருவது கள நிலவரத்தை சுட்டிக்காட்டுகிறது. எதிர்வரவுள்ள தேர்தலில் 370 இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதில், பெரும்பாலான இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து பாஜக மாநிலத் தலைமை மற்றும் உங்களால் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இன்று அனைத்து குடிமக்களும் மீண்டும் பாஜக வர வேண்டும் என விரும்புகின்றனர். நாம் அனைவரும் சேர்ந்து மோடியை மீண்டும் பிரதமராக்குவோம். அவரது வளர்சியடைந்த பாரதம் கனவை நனவாக்குவோம்.” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் தமிழகத்தின் மாற்றுக் கட்சிகளிலிருந்து அரசியல் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதிகள், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். மக்கள் நலன் சார்ந்த நேர்மையான தேசியக் கண்ணோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அவர்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக்க பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அனைவரின் மேலான உழைப்பையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் விவரத்தையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதன்படி,
1. கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல்
2. கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி
3. பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ரத்தினம்
4. சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி
5. அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.கந்தசாமி
6. தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ஜெயராமன்
7. வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் கோமதி சீனிவாசன்
8. வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.வாசன்
9. ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தங்கராஜ்
10. புவனகிரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள்
11. பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருநாதன்
12. காங்கேயம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன்
13. திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழழகன்
14. காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன்
15. கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரோகிணி
16. சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ.வெங்கடாசலம்
17. கன்னியாகுமரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன்
18. முன்னாள் சிதம்பரம் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு
ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.