தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,331 கோடி நிதி: மற்ற மாநிலங்களை விட குறைவு - என்ன காரணம்?
தமிழக ரயில்வே திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2024-25ஆம் நிதியாண்டில் ரயில்வேத்துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.19,575 கோடியும், குறைந்தபட்சமாக டெல்லிக்கு ரூ.2,577 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.15,554 கோடி, மேற்குவங்கம் ரூ.13,810 கோடி, பீகார் ரூ.10,032 கோடி, ஆந்திரா ரூ.9,138 கோடி, ராஜஸ்தான் ரூ.9,782 கோடி, கர்நாடகா ரூ.7,524 கோடி, தெலங்கானா ரூ.5,071 கோடி, குஜராத் ரூ.8,587 கோடி, உத்தராகண்ட் ரூ.5,120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 4027.08 கி.மீ தூரத்துக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.6080 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் ரயில்வேதுறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்து டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய பட்ஜெட்டில் 2024 - 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத்துறையில் அனைத்தையும் பிரதமர் மோடி மாற்றி அமைத்து உள்ளார்.” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு 15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு ரயில்வே திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 2009-14-ம் ஆண்டில் ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இன்றைய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-14ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7 மடங்கு உயர்வாகும். தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்துக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.251 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
மக்களவை தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை - த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்!
ஆனாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. உதாரணமாக, கர்நாடக மாநிலத்துக்கு 3281.36 கி.மீ தூரத்துக்கு ரூ.7524 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 339.80 கி.மீ தூரத்துக்கு ரூ.5,120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் பல மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் திட்ட பணிகளுக்கு ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சில மாநிலங்களில் குறைவான கி.மீ தூரமே பணிகள் என்றாலும் நிலப்பரப்பை பொறுத்து அதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும். சில இடங்களில் அதிக பணிகள் செய்ய வேண்டியதிருக்கும். இதுபோன்ற காரணிகளை ஆராய்ந்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்கிறார்கள்.