மக்களவை தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை - த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்!
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாகவும் படிப்படியாக மாற்றி வந்தார். அந்த வகையில், மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்யும் வகையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை போட்டியிட வைத்து வெற்றியும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயரிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் விஜய் தொடங்கவிருக்கும் கட்சி தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் யாருடன் கூட்டணி அமைப்பார்? மக்களவைத் தேர்தலில் களம் காண்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், மக்களவைத் தேர்தலில் விஜய் களம் காண மாட்டார்; அவரது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் என இதற்கு முன்பு பலமுறை நமது ஏசியாநெட் செய்தித்தளத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த வகையில், மேற்கண்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் தனது அறிக்கையிலேயே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாக விஜய் தெரிவித்துள்ளார். அதேசமயம், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களீன் உயர்வுக்குமான கட்சியின் கொள்கைகள், கோட்பாடு, கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.