தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளன: ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது

Union govt gives detail statewise list of thatched huts and answer about pmayg scheme smp

நாடாளுமன்ற மக்களவையில், “விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? அவ்வாறு இருந்தால் விவரங்களை தருக?; 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கிய தொகை வருட வாரியாக தெரிவிக்கவும்; இந்தியாவில் இருக்கும் குடிசை வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? மாநில வாரியாக விவரங்களைத் தருக?”  ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துள்ளார். அதில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை 2024 மார்ச் வரை ஒன்றிய அரசு நீட்டித்து உள்ளது. இதன் கீழ் இந்தியா முழுவதும் 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைக்கு வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட தொகையின் விவரங்களையும்,  இந்திய அளவில் மாநில வாரியாக குடிசை வீடுகள் எவ்வளவு இருக்கின்றன என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த விவரங்களின் படி தமிழ்நாட்டுக்கு 2016 - 2017 ஆம் நிதியாண்டிலிருந்து 2021- 2022 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 3,536.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை தரப்பட்டிருக்கிறது. 2.95 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டுவது என்ற இலக்கு அந்த கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியினர்: பின்னணி என்ன? பாஜகவின் கணக்கு இதுதான்!

வழங்கப்பட்டிருக்கும் அட்டவணையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சுவர் கூரை இரண்டும் தற்காலிகமானதாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 3,71,382 எனவும், சேறு, மூங்கில், முதலானவற்றைக் கொண்டு சுவர் அமைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4,45,459 எனவும்; கீற்று, இலை, தழை கொண்டு அமைக்கப்பட்ட கூரை உள்ள வீடுகளின் எண்ணிக்கை 18,63,373 என்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60% ஒன்றிய அரசு வழங்குகிறது, மீதமுள்ள 40% தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். இதில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெறுவதற்கான தகுதி படைத்தவர்கள் என்பது பல்வேறு வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த விதத்தில் தான் ஒட்டுமொத்தமாக 2.95 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.” என்றார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவிலேயே குடிசை வீடுகள் அதிகமாக உள்ள மாநிலமாக பீகார் இருக்கிறது. இரண்டாவதாக உத்தர பிரதேசமும், மூன்றாவதாக மேற்கு வங்கமும் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios