சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியினர்: பின்னணி என்ன? பாஜகவின் கணக்கு இதுதான்!
சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ததற்கு பின்னால் பாஜகவுக்கு பல கணக்குகள் உள்ளன
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல் பார்க்கப்படுவதால், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வெற்றி அக்கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்களையும் பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு பின்னால் எதிர்கால திட்டத்துடன் பல்வேறு கணக்குகளை அக்கட்சி போட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியின தலைவர் விஷ்ணு தியோ சாயின் தேர்வு வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவின் செயல்திறனை அதிகரிக்கும் உத்தியின் ஒரு பகுதியாகும். நிர்வாக திறன்களுக்கு பெயர் போன, 59 வயதான அவர், பழங்குடி சமூகங்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெங்கானாவுடன் சத்தீஸ்கர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் பழங்குடியினர் கணிசமாக உள்ளனர்.
“இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக்கு பின்னர், இந்தியாவின் ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் தொகையில், 7.5 சதவீதத்துக்கும் அதிகமாக அச்சமூகத்தினர் வாழும் சத்தீஸ்கரில், பிரதமர் மோடியின் ஒப்புதலுடன் பாஜகவின் அரசியல் சிந்தனைக் குழு பழங்குடியினர் ஒருவரை முதல்வராக நியமித்து 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அச்சமூகத்தை கவரும் வகையில் காய்களை நகர்த்தியுள்ளது.” என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும்: ஷெபாஸ் ஷெரீப் திட்டவட்டம்!
பழங்குடியினத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் மற்றும் சமூகத்திற்காக ஆற்றிய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பழங்குடியினரின் வாக்கு வங்கியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது என்றும் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 29. அதில், 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2018இல் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பாடம் கற்ற பாஜக, எஸ்.டி. மக்களுக்கான தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து, கடந்த ஐந்தாண்டுகளில் அச்சமூக மக்கள் மத்தியில் தங்களது பணிகளை தெரியப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விஷ்ணு தியோ சாய்-யை முதல்வராக்கி தமது பிம்பத்தை பாஜக மேலும் வலுப்படுத்தியுள்ளது.