Asianet News TamilAsianet News Tamil

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டி தொழிற்சங்கம் தீர்மானம்... 

Union decision to permanent contract workers who work in electric power ...
Union decision to permanent contract workers who work in electric power ...
Author
First Published May 2, 2018, 11:25 AM IST


தருமபுரி

மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தருமபுரியில் நடந்த ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு தருமபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அகில இந்திய ஐ.என்.டி.யு.சி. அமைப்பு செயலாளர் கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கினார். 

மாநில நிர்வாகி பாடி நாகராஜன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், முன்னாள் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜாராம்வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பன்னாட்டு பொதுத்துறை கூட்டமைப்பு செயலாளர் லட்சுமி வரவேற்று பேசினார். சங்க பொதுச்செயலாளர் சுவர்ணராசு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். 

இந்த மாநாட்டில், "ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 கூலி உயர்வு வழங்கிய மின்சார துறை அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது, 

புதிய உயர் மற்றும் தாழ்நிலை மின்பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 

மின்கழகத்தில் பணிபுரியும்போது மரணம் அடையும் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவி தொகையும், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ற வேலை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் சங்க பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் தூயமணி, அமைப்பு செயலாளர் சேகர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மாநாட்டின் முடிவில் சங்க நிர்வாகி அன்பழகன் நன்றி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios