Asianet News TamilAsianet News Tamil

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்: கண் கலங்கிய உதயநிதி ஸ்டாலின்!

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கிய சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது

Udhayanidhi stalin shed tears when anitha documentry telecast in neet hunger strike
Author
First Published Aug 20, 2023, 4:20 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் திருப்பி அனுப்பி விட்டார். இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டதால், சட்டப்படி அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துக்களை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஒருவர் நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் அளித்த பதில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதனிடையே, சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த துக்கம் தாளாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

 

 

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு, ஆளுநரை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி (இன்று) திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் மட்டும் அதிமுக மாநாடு காரணமாக உண்ணாவிரதப் போராட்டமானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, நீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, மருத்துவர் கனவு பொய்த்ததால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. காணொலியில் அனிதா பேசும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தும் அவரால், முடியவில்லை. கண்களில் தேம்பிய கண்ணீரை பலமுறை அவர் துடைத்தார். இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கவர்னருக்கு எந்த பவரும் இல்லை.. அவர் வெறும் போஸ்ட் மென் தான்... இறங்கிய அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

Follow Us:
Download App:
  • android
  • ios