நீட் ரகசியம் உடைத்த உதயநிதி.. அடுத்த போராட்டம் டெல்லியில்!

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அத்தேர்வை ஒழிக்கும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Udhayanidhi stalin reveals neet ban secret next protest in delhi

நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு, ஆளுநரை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி (இன்று) திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் மட்டும் அதிமுக மாநாடு காரணமாக உண்ணாவிரதப் போராட்டமானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுறையாற்றிய உதயநிதி ஸ்டாலின், எங்கள் முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது மட்டும்தான் உங்கள் வேலை என ஆளுநர் ரவியை காட்டமாக விமர்சித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ பங்கேற்கவில்லை என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “உயிரிழந்த 21 குழந்தைகளின் அண்ணனாக பேசுகிறேன். இது தற்கொலை அல்ல; கொலை. இந்த கொலையை செய்தது ஒன்றிய அரசு. 21 கொலைகளை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு துணை நின்றது அடிமை அதிமுக.” என்றார்.

பொதுதேர்வின் போது தற்கொலை செய்து கொள்வது வழக்கமானது என பாஜக தலைவர் கூறி உள்ளதை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கு தெரியாது என எச்சரிக்கை விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாடு பிடிப்பதற்கு சண்டை போட்டோம். மாணவர்கள் உயிருக்காக சண்டை போட மாட்டோமா? என நீட்டுக்கு எதிராக ஒன்று திரள உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய  போராட்டம் முடிவல்ல ஆரம்பம் என்று தெரிவித்த அவர், நீட் விலக்கு கோரி முதல்வரிடம் உரிய அனுமதி பெற்று அடுத்த போராட்டம் டெல்லியில் நடத்தப்படும் என்றார். நீட் விவகாரத்தில் பிரதமர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட தயார். நீங்கள் வர தயாரா எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்வை அகற்றம் ரகசியம் தங்களுக்கு தெரியும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், மாநில அரசால் எதுவும் செய்து விட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். மாநில அரசால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டப்போராட்டம் மட்டுமே நடத்த முடியும். அதனை மாநில அரசு செய்து  வருகிறது. இருப்பினும், நீட் ரகசியம் தொடர்பான உதயநிதி கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வை அகற்றும் ரகசியம் குறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்டி காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும். இதுதான் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் என தெரிவித்துள்ளார்.

மதுரை அதிமுக மாநாடு சிறப்பு மலர் வெளியீடு; திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள்!

உதயநிதி ஸ்டாலின் நிறைவுரையாற்றியதை, திமுக சார்பில் நடைபெற்று வந்த நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை, பழரசம் கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முடித்து வைத்தார். முன்னதாக, நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. காணொலியில் அனிதா பேசும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios