பாஜகவின் மிரட்டல் திமுகவிடம் வேலைக்கு ஆகாது. திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜய்யையையும் காகித அட்டை என்று விமர்சித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். பின்பு உரையாற்றிய உதயநிதி, தவெக தலைவர் விஜய்யையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சரமாரியாக விமர்சித்தார்.
புதுசு புதுசா வரலாம். ஷோ காட்டலாம்
இது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ''தமிழகத்தில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதி. யார் யாரோ புதுசு புதுசா வரலாம். ஷோ காட்டலாம். நான் ஏற்கனவே கூறியது போல 'அட்டை' சிறிய காற்றடித்தால் கூட காணாமல் போய்விடும்'' என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
அமித்ஷா மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்
தொடர்ந்து அமித்ஷா குறித்து பேசிய உதயநிதி, ''தமிழ்நாட்டுக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு பொதுக்கூட்டத்தில் என் பெயரை குறிப்பிட்டு பேசுகிறார். அவர் எப்போதும் எனது நியாபமாகவே இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினை முதல்வராக விட மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ளார். நான் இதை கேட்டேனா.
நீங்கள் என்ன கூப்பாடு போட்டாலும் தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக கொண்டு வருவார்கள். உங்கள் உரட்டல் மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேலைக்கு ஆகாது. உங்களுக்கு பயப்படுவதற்கு இது அண்ணா திமுக அல்ல. அண்ணா உருவாக்கிய திமுக'' என்று தெரிவித்துள்ளார்.


