Asianet News TamilAsianet News Tamil

மதுரை பூரணம் அம்மாளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

அரசுப்பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரை ஆயி பூரணம் அம்மாளை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

Udhayanidhi stalin meets Madurai pooranam ammal who donated her property to govt school smp
Author
First Published Jan 17, 2024, 2:29 PM IST | Last Updated Jan 17, 2024, 2:29 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை சென்றுள்ள அவர், கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரை ஆயி பூரணம் அம்மாளை நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவு பரிசு ஒன்றை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

 

 

மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அம்மாளின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அரசுப்பள்ளிக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரளா திரிபிராயர் ஸ்ரீராம சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்?

மதுரை ஒத்தகடை அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாள் (52), மதுரை சர்வேயர் காலனியில் வசித்து வருகிறார். மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய இவரது கணவர், கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார்.  இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் ஆயி பூரணம் அம்மாளுக்கு கிளார்க் பணி ஒதுக்கப்பட்டு அங்கு அவர் பணிபுரிந்து வருகிறார்.

தனி ஆளாக நின்று தனது மகள் ஜனனியை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு ஆயி பூரணம் அம்மாளின் மகள் ஜனனி (30) உயிரிழந்து விட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக ஆயி பூரணம் அம்மாள் கொடுத்தார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயி பூரணம் அம்மாளின் சேவையை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மதுரை பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் மாநாட்டில் ஆயி பூரணம் அம்மாள் கவுரவிக்கப்படுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios