கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை பேட்டி கொடுக்க சொல்லுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அஜித்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அது குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தது தான் தமிழகத்தின் ஹாட் டாபிக் ஆக உள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித்குமார், ''தமிழ்நாட்டில் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அந்த தனி நபர் (விஜய்) மட்டும் பொறுப்பல்ல. நாம் எல்லோரும் தான் இதற்கு பொறுப்பு. மீடியாவும் தான் இதற்கு பொறுப்பு.
அஜித்தின் பரபரப்பு பேட்டி
ஏன் நானும் கூட தான் இதற்கு பொறுப்பு. செல்வாக்கைக் காட்ட ஒரு கூட்டத்தை ஒன்று சேர்ப்பது முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட், கபடி பார்க்க கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி கூட்டம் வருவதில்லை. இது சினிமா துறையை தவறாக காட்டுகிறது. சினிமாவிலும் முதல் காட்சிக்கு கூடுவதை நாம் ஊக்கப்படுத்தக் கூடாது'' என்று கூறியிருந்தார்.
விஜய் பேட்டி கொடுக்க விரும்பவில்லையா?
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் விவகாரம் குறித்து அஜித் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ''உண்மையிலேயே யாரு பேட்டி கொடுக்கணுமோ நீங்க அவரிடம் (விஜய்) பேட்டி எடுக்க முயற்சிக்கவில்லையா? இல்லை பேட்டி கொடுக்க விரும்பவில்லையா? என்று எனக்கு தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடந்து வருவதால் இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
அஜித் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
அஜித் சார் பேட்டியை கொஞ்சம் கொஞ்சம் தான் பார்த்தேன். இன்னும் நான் முழுசாக பார்க்கவில்லை. ஆகையால் கருத்து கூற விரும்பவில்லை. அஜித் சொன்னது அவரது சொந்த கருத்து. அது எந்த கருத்தாக இருந்தாலும் பாராட்டத்தக்கது'' என்று தெரிவித்தார்.
