Udhayanidhi : சனாதன சர்ச்சை பேச்சு.. பிடிவாரண்டு எச்சரிக்கை.!! கர்நாடக நீதிமன்ற படியேறி ஜாமின் வாங்கிய உதயநிதி
சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிராக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில். இந்த வழக்கில் இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத உதயநிதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
உதயநிதி சர்ச்சை பேச்சு
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் என பேசியிருந்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
உதயநிதிக்கு எதிராக வழக்கு
உதயநிதி தலைக்கு விலையும் அறிவிக்கப்பட்டது. பல காவல்நிலையங்கள், பல மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. பல மாநிலங்களில் நடைபெறும் சனாதன பேச்சு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் ஒரே வழக்காக நடத்த வேண்டும் என உதயநிதி சார்பாக வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சனாதன தர்மம் குறித்து பேசியதாக பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா, பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை.
நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்
எனவே இன்றைய தினம் உதயநிதி ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்.ஜே முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இதனையடுத்து சனாதான சர்ச்சை பேச்சு வழக்கில் உதயநிதிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கர்நாடக மாநில நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.