Udhayanidhi Stalin: டெங்கு, மலேரியா போல சனாதனத்தை அழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின், தற்போது 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்துக்களை அவமதிக்கும் செயல். 

டெங்கு மலேரியா கொசு போல சனாதன தர்மத்தை, அதாவது இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கையில்: நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபஒளி திருநாள் வாழ்த்துகள்" என்று 100 கோடி இந்து மக்களையும் உலகிற்கு வழிகாட்டும் இந்து மதத்தையும் உதயநிதி அவமதிப்பது நியாயமா? மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற உதயநிதிக்கு துணிச்சல் உள்ளதா? திமுக இந்து விரோத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களையும் சமமாகவே நடத்த வேண்டும். ஆனால், திமுக அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறக்கூட மனமில்லாமல், இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பை கக்கி வருகிறது.

திமுக தலைவராக மு.க. ஸ்டாலினிடம் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் முதலமைச்சர் என்பவர் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். திமுக தலைவருக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். முதலமைச்சருக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாது. அது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது. மக்கள் அனைவரையும் சமமாகவே நினைக்க வேண்டும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மத பண்டிகைகள் அனைத்திற்கும் தவறாமல் வாழ்த்து கூறுகிறார். அந்நிய நாடுகளில் இருந்து வந்த மதங்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுகிறார். அதை தவறு என்று நாங்கள் கூறவில்லை. அப்படி வாழ்த்து கூறுவதை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால், 6 கோடிக்கு அதிகமான இந்துக்கள் வாழும் தமிழகத்தில் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக மறுத்து வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்" என்று கூறியதாக செய்திகள் வந்துள்ளன.

மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற துணிச்சல் இல்லாதவர், "தீபாவளி பண்டிகைக்கு மட்டும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துகள்" என்று கூறுவது தமிழகத்தில் உள்ள இந்துக்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்களை அவமதிக்கும் செயல். டெங்கு மலேரியா கொசு போல சனாதன தர்மத்தை, அதாவது இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

"எவ்வளவுதான் அதர்மம் தலை தூக்கினாலும் இறுதியில் தர்மமே வெல்லும்" என்ற இந்து மதத்தின் அடிப்படை கோட்பாட்டை வலியுறுத்தி கொண்டாடப்படுவது தான் தீபாவளி பண்டிகை. அதனால்தான் என்னவோ, தர்மத்திற்கு எதிரான தீய சக்திகள் தீபாவளி பண்டிகையை கொச்சைப்படுத்தி வருகின்றன. இப்போது அவர்களுக்கு வெற்றி கிடைப்பது போல தோன்றலாம். ஆனால் இறுதியில் அவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும். இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில் கூட கண்ணியத்தை கடைப்பிடிக்காத இந்து விரோத திமுக அரசுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.