திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கணவரின் குடிப்பழக்கம் மற்றும் தொந்தரவு காரணமாக மனமுடைந்த கௌரி என்ற பெண் தனது இரண்டு மகன்களுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கௌரி(30). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிஷோர்(5) அரசு பள்ளியில் 1ம் வகுப்பும், தேவேஷ்(4) அங்கன்வாடி மையத்திலும் படித்து வந்தனர். குடிக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் குடிக்க பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கௌரி மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து கௌரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அந்த செல்போனை தொழிலாளி ஒருவர் எடுத்து, விவசாய கிணற்றின் மேல் கிடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றுக்குள் கிடந்த கிஷோர், தேவேஷ், கௌரி ஆகிய 3 பேரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். இதனையடுத்து 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி கௌரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.