பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவிற்கு 10 ஓட்டுகள் கூட விழாது... தேர்தலில் நாடகம் போடும் எடப்பாடி- உதயநிதி
தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி தந்தால், ஒன்றிய அரசு வெறும் 29 பைசா தான் தருகிறது. அதுவே ஒரு ரூபாய்க்கு உத்தரப்பிரேதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் தருகிறார்கள். எவன் அப்பன் வீட்டு காசை எடுத்து யாருக்கு தருவது? என உதயநிதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், “38 தொகுதிகளை முடித்து விட்டு, கடைசியாக 39 வது தொகுதியாக கோவைக்கு வந்துள்ளேன். கணபதி ராஜ்குமாருக்கு நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு என தெரிவித்தார்.
கோவை தொகுதியில் பத்து ஆண்டுகள் கழித்து உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது. தலைவரிடம் கேட்டு இந்த தொகுதியில் போட்டியிடுகிறோம். குறைந்தது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜகவை விரட்டியடித்து, இந்தியா கூட்டணி தான் ஆட்சியமைக்கும். அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கும். 39 க்கு 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என கூறினார். மக்கள் வாக்களித்து ஆதரவை பெற்று முதலமைச்சராக உட்கார்ந்தவர் ஸ்டாலின். யார் காலிலாவது போய் விழுந்தாரா? எங்காவது தவழ்ந்து போனாரா? அப்படி யார் முதலமைச்சரானார்? தவழ்ந்து தவழ்ந்து போயி சசிகலா காலை பிடித்து முதலமைச்சராகி, அவர் காலையே வாரி விட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் என கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவிற்கு 10 ஒட்டுக்கள் கூட கிடைக்காது
பாஜக உடன் சேர்ந்தால் 10 ஓட்டுகள் கூட விழாது என தேர்தல் நாடகம் ஆடுகிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். 40 க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் கை காட்டுபவர் பிரதமராக வேண்டும். பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மோடி, தமிழ்நாட்டிற்கு எதாவது செய்துள்ளாரா? பேரிடர் நிதியாக ஒரு பைசா கூட அவர் தரவில்லை. பிரதமரை பெயர் சொல்லி அழைக்காமல், 29 பைசா என அழைக்க வேண்டும். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி தந்தால், ஒன்றிய அரசு வெறும் 29 பைசா தான் தருகிறது. அதுவே ஒரு ரூபாய்க்கு உத்தரப்பிரேதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் தருகிறார்கள். எவன் அப்பன் வீட்டு காசை எடுத்து யாருக்கு தருவது?
29 பைசா பிரதமர்
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக என பொய் சொல்வார்கள். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அடிமை கூட்டம் நீட் தேர்வை அனுமதித்ததால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். 29 பைசா தரும் போதே, இவ்வளவு செய்யும் முதலமைச்சர், நம்மை மதிக்கும் பிரதமர் அமைந்தால் இன்னும் எவ்வளவு செய்வார்? தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் மோடி தமிழ்நாட்டிற்கு வருவார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Annamalai: முதியோர் இல்லத்தில் கண்கலங்கியபடி பேசிய அண்ணாமலை; பாஜக ஸ்டைலில் ஆறுதல் சொன்ன முதியவர்கள்