உதய் திட்டத்தில் 21 மாநிலமாக இணைகிறது தமிழகம்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அமைச்சர் தங்கமணி இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

உஜ்வால் மின் விநியோக உறுதியளிப்புத் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இன்று இணைய உள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக மின்துறை அமைச்சர் தங்க மணி இடையே முறைப்படி கையொப்பமாகிறது.

உதய் திட்டத்துக்கு தொடக்கத்தில் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ்கோயல் சென்னை  வந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக உதய் திட்டம் தொடர்பான சந்தேகங்களை களைய மத்திய, மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உதய்திட்டத்தில், இணையும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறார்.

இத்திட்டத்தின் படி, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். நலிவடைந்த மின்வாரியங்களை சீரமைப்பது, மின் வினியோகத்திலும் தனியாருக்கு அனுமதி, பெட்ரோல், டீசல் போன்று, மூன்று மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது, மீட்டர் பொருத்தாத மின் இணைப்புகளே இருக்க கூடாது, இலவச மின்சாரத்துக்கும் மீட்டர் பொருத்த வேண்டும், ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மூலம் மின் கம்பங்கள், பூமிக்கு அடியில் பதிக்கும் கேபிள்கள்,டிரான்ஸ்பார்ம் அதிகப்படுத்துவது உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். 

அதேபோன்று மின்வினியோகமும் கம்ப்யூட்டர் மூலம் நவீனப்படுத்தப்படும். மின் இழப்பு குறைக்கவும், மின் திருட்டை கண்டுபிடிக்கவும் சிறப்பு திட்டம், மின்நுகர்வே குறைக்க எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்துதல், ஏ.சி. பேன், தொழில்சாலை எந்திரங்கள் பயன்படுத்தும் போது அதிகமின்சாரம் நுகரப்படுவதை குறைக்கும் வகையில் நவீன கருவிகள் பொருத்துதல்  என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இதற்காக மத்தியஅரசு தமிழக அரசுக்கு உதவிகள் புரியும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த உதய் திட்டத்தின் மூலம் தமிழகம் வட்டி சேமிப்பு, மின் இழப்பு குறைத்தல், மின்சேமிப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.11 ஆயிரம் கோடிசேமிக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தால் ரூ.4 லட்சம் கோடிக் கடனில் 90 சதவீதம் ஈடுகட்டப்படும்'' என்றார்.

அதேசமயம்,  நிதி சீரமைப்பு திட்டம் என்ற பெயரில், மின்வாரிய கடன்களை மாநில அரசு 70 சதவீதம், அதாவது ரூ.30,420 கோடி கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 30 சதவீதமும் பாண்டுகளாக மாற்றப்பட்டு, வங்கிகளுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொள்வதாக கூறி, குஜராத், மகாராஷ்டிரா, காஷ்மீர், ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்பட 20 மாநிலங்கள் இதுவரை இணைந்துள்ளன. ஆனால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டம் கூட்டாச்சி தத்துவத்துக்கு எதிரானது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து இதில் இணைய மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைஎன்ன? 

தமிழக மின்வாரியத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணி புரிந்து வருகின்றனர். மேலும் 85 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். உதய் திட்டம் அமலுக்கு வந்தால், அனைத்தும் தனியார் வசம் சென்று விடும். 
இவர்களுக்கு பணி வழங்கப்படுமா, ஓய்வூதியர்களின் கதி என்ன என ஏராளமான கேள்விகளுக்கு இதுவரை மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை.