தாய் கண் முன்னே ஆற்றில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி.! சோகத்தில் தேனி மக்கள்
முல்லை பெரியாறு ஆற்றில் துணி துவைக்க தாயோடு சென்ற குழந்தைகள் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தேனியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்றில் மூழ்கிய அண்ணன், தங்கை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி, இவரது கணவர் மணிகண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் தனது குழந்தைகளை தனது சொந்த உழைப்பின் மூலம் வளர்த்து வந்துள்ளார். நேற்று(4.4.2024) மதியம் போல் முல்லை பெரியாற்றில் துணி துவைப்பதற்காக தனது மகன் தீன தயாளன் வயது 10 மற்றும் மகள் மகாசக்தி வயது 7 ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது துவைத்த துணிகளை காயவைப்பதற்காக கலைவாணி கரையின் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனது குழந்தைகளை ஆற்று பகுதியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது தீன தயாளனும் அவனது தங்கை மகா சக்தியும் எதிர்பாராத விதமாக ஆற்றில் இறங்கி விளையாடியுள்ளனர். குழந்தைகள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளையும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தாய் கண் முன்னே உயிரிழந்த சோகம்
பின்னர் அந்த இடத்திற்கு வந்த பார்த்த கலைவாணி குழந்தைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கத்தியுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவர் சிறுமிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஆற்றின் பள்ளமான பகுதியில் இருவரையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகள் இறப்பு தொடர்பாக தகவல் அறிந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் துணி துவைப்பதற்காக அம்மாவுடன் சென்ற அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்