பழங்குடி இளைஞர் மது அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு.. 14 பேர் குற்றவாளிகள்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கேரளா மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது, பசிக்காக 2018ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உணவு திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது, பசிக்காக 2018ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.ஐ.டி.யூ நிர்வாகியும், டாக்ஸி டிரைவருமான சம்சுதீன் கம்பால் தாக்கியதில் மதுவின் விலா எலும்பு முறிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 15 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் மது உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இக்கொலை வழக்கு மன்னார்க்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், 14 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.