திருவாரூர்

திருவாரூரில், தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில சாராய புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட எடகீழையூர் வடக்குத் தெரு பி. கவியரசன் (26), நாவல்பூண்டி தெற்குத் தெரு கே.குபேந்திரன் ஆகியோர், தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில சாராய புட்டிகளை வீடுகளில் இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர் என்ற இரகசிய தகவல் காவல் ஆய்வாளர் ஜெயந்திக்கு கிடைத்தது. 

அந்த தகவலின்பேரில் கவியரசன் மற்றும் குபேந்திரன் ஆகியோரின் வீடுகளில் காவலாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அவர்களின் வீடுகளின் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட சாராய புட்டிகள்  இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து 17 சாராய புட்டிகளை பறிமுதல் செய்த காவலாளர்கள் கவியரசன் மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.