Asianet News TamilAsianet News Tamil

வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.84 இலட்சம் மோசடி செய்த இருவர் கைது; தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு...

Two arrested for fraudulent Rs.84 lakh in agricultural cooperative credit union searching other two
Two arrested for fraudulent Rs.84 lakh in agricultural cooperative credit union searching other two
Author
First Published Dec 28, 2017, 9:18 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.84 இலட்சம் மோசடி செய்த செயலர், எழுத்தரை பொருளாதார குற்றபிரிவு காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள தலைவர், காசாளரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் ஏராளமான விவசாயிகள் தங்க நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளதுடன், பயிர்க் கடனும் வாங்கியுள்ளனர்.

இந்த சங்கத்தின் செயலராக திருவண்ணாமலையைச் சேர்ந்த தண்டபாணியும், தலைவராக மூர்த்தியும், எழுத்தாளராக சுப்பிரமணியனும், காசாளராக ஆடையூரைச் சேர்ந்த சிவசங்கரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2014 - 2016-ஆம் ஆண்டு வரை நகைகளை அடகுவைத்து கடன் பெற்ற விவசாயிகள், நகைகளை மீட்பதற்காக பணத்தை செலுத்தியுள்ளனர். பயிர்க்கடன் வாங்கியவர்களும் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

ஆனால், நகைக்கான பணத்தை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு நகைகளையும், பயிர்க் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் முடிந்ததற்கான சான்றிதழையும் வழங்காமல் வங்கி நிர்வாகிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். மேலும், விவசாயிகள் செலுத்திய பணத்தை வங்கியில் உள்ள புத்தகத்தில் வரவும் வைக்காமல் இருந்துள்ளனர்.

நீண்ட நாள்களாகியும் நகைகளை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கப் பதிவாளர் ஞானசேகரனிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, வேங்கிக்கால் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்தும்படி திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சரவணனுக்கு ஞானசேகரன் அதிரடியாக உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில், சரவணன் வேங்கிக்கால் கூட்டுறவு கடன் சங்கத்திலும், விவசாயிகளிடமும் விசாரணை நடத்தினார்.

அப்போது, 2014 - 2016-ஆம் ஆண்டு வரை கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தொகையை வரவு வைக்காமல் செயலர் தண்டபாணி உள்ளிட்ட நால்வரும் மொத்தம் ரூ.84 இலட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து துணைப் பதிவாளர் சரவணன், திருவண்ணாமலை பொருளாதார குற்றப் பிரிவு காவலில் நேற்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில், காவலாளர்கள் வழக்குப் பதிந்து வேங்கிக்கால் கூட்டுறவு கடன் சங்கச் செயலர் தண்டபாணி, எழுத்தர் சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வங்கித் தலைவர் மூர்த்தி, காசாளர் சிவசங்கர் ஆகியோரை காவலளார்கள் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios