கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தால் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உடனடியாகக் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், மருத்துவமனை வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
மருத்துவமனையில் கூட்ட நெரிசல்:
கூட்டத்தில் மயக்கமடைந்த நபர்கள், அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்ததால் மருத்துவமனையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதி:
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளிலும் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், இந்தக் கோடை வெயிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கலெக்டர் நேரில் ஆய்வு:
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஜய் பிரச்சாரம் செய்த வேலுச்சாமிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் போதுமான முதலுதவி ஏற்பாடுகள் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விஜய் தனது பேச்சின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்ட சில நிமிடங்களில், இந்தச் சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
