தவெகவில் ஜனநாயகம் உள்ளது. அதிமுகவில் மனிதநேயம் கூட இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவர் நேரடியாக விமர்சனம் செய்தார்.

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியில் இணைந்த பிறகு இன்று முதன்முறையாக கோபிச்செட்டிபாளையம் சென்றார். அங்கு அவருக்கு தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு சால்வை போத்தியும், மாலை அணிவித்தும் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். தவெக தொண்டர்களின் வரவேற்பால் செங்கோட்டையன் திக்குமுக்காடிப் போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

எடப்பாடியை அட்டாக் செய்த செங்கோட்டையன்

பின்பு தவெக தொண்டர்கள் அலைக்கு மத்தியில் பேசிய செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அட்டாக் செய்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''ஏன் ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்துளீர்கள் என்று பத்திரிகை நண்பர்கள் கேட்டார்கள். தவெகவில் ஜனநாயகம் உள்ளது. தவெகவில் யார் படத்தை வைத்தாலும் அதை அவர்களை அரவணைத்து செல்பவர் தான் விஜய். காலை இழுத்து விடுபவர் நாளை இங்கு வரப்போகிறார்.

அதிமுகவில் மனித நேயம் இல்லை

வருபவருக்கு நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்கு தெரியும். அவரை பொதுச்செயலாளராக முன்மொழிந்தேன். முதலமைச்சராக முன்மொழிந்தேன். எனக்கு வருகிற வாய்ப்பை அவரை ஏற்றுக்கொள்ள சொன்னவன் நான். ஆனால் மனித நேயம் அங்கே இல்லை. சமத்துவம் அங்கே இல்லை. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் உழைத்த உழைப்பு அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் சாதாரண தொண்டனாக கூட இருக்கக் கூடாது என்று உறுப்பினர் பொறுப்பை எடுத்தார்.

இவர் முதல்வராக வரக் கூடாது

என்னுடன் இருந்த அனைவரது பொறுப்பையும் எடுத்தார். நான் துக்க நிகழ்வுக்காக ஒரு நிர்வாகியின் வீட்டுக்கு சென்றபோது இவரை ஏன் சந்தித்தாய்? என்று என்னை கட்சியில் இருந்து நீக்கினார். தமிழகத்தில் எங்கும் நடக்காத வெட்கக்கேடு இது. இவரெல்லாம் நாளை தமிழ்நாட்டில் முதல்வராக வந்தால் என்ன நடக்கும்? என்று நினைத்து பாருங்கள். ஆகவே ஆட்சிக்கு வருவதை யார் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.