பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்க முடிகின்றது, மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கேகே நகரில் நேற்று மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கேற்றார் போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது.
மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன் பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடு இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: எஸ்.ஐ எழுத்து தேர்வு.. 444 இடங்களுக்கு 2.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்..முதல்முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு
முன்னதாக சென்னை கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணிபுரியும் வாணி கபிலன், நேற்று மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு, அவரது சகோதரி எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். இதனிடையே கார் , கே.கே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கர்நாடக வங்கி அருகே வந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்துள்ளது. இதில் காரின் பின்பக்கம் முழுவதும் நொறுங்கி சேதமானது. மேலும் இதில் காரின் பின் பக்கம் அமர்ந்திருந்த வாணி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அந்த பகுதியில் மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டும் போது மரத்தை வெட்டி இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த பாதையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பாக பள்ளம் தோண்டிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று கனமழை.. அடித்து ஊற்றப்போகும் மாவட்டங்கள்.. வானிலைஅப்டேட்
