கடந்த 1996 -97ம் ஆண்டில் டிடிவி.தினகரன் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஈடுபட்டதாக அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தினகரன் மீது கடந்த ஏப்ரல் 19ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை 3 மாதத்திற்குள் விரைந்து முடிக்கவும், ஏற்கனவே செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து இந்த வழக்கு கடந்த எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பினரும், அமலாக்க துறையினரும் வாதாடினர். அப்போது டிடிவி.தினகரன், தன்மீது பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வரும் 3ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறி, நீதிபதி ஒத்தி வைத்தார். இதைதொடர்ந்து புதிய குற்றச்சாட்டு, டிடிவி.தினகரன் மீது பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டிடிவி.தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறிய டிடிவி.தினகரன், “நீதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த குற்றச்சாட்டை பதிவு செய்தாலும், அதை முறையாக சந்திப்பேன்” என கூறினார்.