ttv dinakaran came from thihar Jail
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்தையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.
பிறகு ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் கைது செய்யப்பட்டார். அவருடன் பணப்பட்டுவாடா செய்ய உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டு டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
டி.டி.வி.தினகரன் ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாத ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஜாமீன் கிடைத்ததால் டி.டி.வி.தினகரனை உடனடியாக விடுவிக்க அவரது வக்கீல்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று டி.டி.வி. தினகரனின் வக்கீல்கள் ரூ. 5 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் ஜாமீன் நடைமுறைகள் முடிந்து, டி.டி.வி. தினகரனும் மல்லிகார்ஜுனாவும் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
சிறையில் இருந்தது தினகரன் விடுவிக்கப்பட்டதையடுத்து சென்னை வரும் அவர் கட்சிப் பணிகளை கவனிப்பாரா ?
