ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டி! டிடிவி தினகரன் அறிவிப்பு
டிடிவி தினகரன் ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்த பெற்ற ஆண்டாள் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். வழிபாட்டுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “வரும் நாடாளுமன்றத் தேர்தலிலை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சந்திப்போம். இனி வரும் காலங்களிலும் அனைத்து நிகழ்வுகளிலும் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கப் போகிறோம்." என்றார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஸ், பாஜகவே வெளியேற்றும் வரை அவர்களுடன் கூட்டணியில் இருப்போம் என்று கூறினார். ஆனால், அவருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாகச் சொல்லும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்கிறார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்டுள்ள நிலையில், சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அடிக்கடி சந்தித்து வருகிறார். கடந்த மே மாதம் ஓ. பன்னீர்செல்வம் டிடிவி தினகரனைச் சந்திக்க அவரது வீடு தேடிச் சென்றிருந்தார். அப்போதே இருவரும் இணைந்து செயல்படப் போவதாகக் கூறியிருந்தனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாநாடு நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் அமமுக பங்கேற்கும் என தினகரன் அறிவித்துள்ளார். அடுத்த நகர்வாக நாடாளுமன்ற தேர்தலிலும் இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!