சென்னையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்துத் தூக்கி வீசும் அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. கொலையாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் எப்படிப் வாழ முடியும் என தினகரன் கேள்வி.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்னை தரமணி அருகே, தன்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பலைத் தட்டிக் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கொலையான கணவர் மற்றும் குழந்தையின் உடல் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் வீசப்பட்ட மனைவியின் உடலை இரண்டாவது நாளாகக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன் மூலம் தமிழகக் காவல்துறை எந்தளவிற்குச் செயலிழந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதைத் தட்டிக் கேட்கச் சென்ற நபர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஆங்காங்கே வீசப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தை எட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொலை, கொள்ளை குற்றவாளிகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குரூர மனம் படைத்தவர்களும், போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் சமூக விரோதிகளும் அச்சமின்றி சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இத்தகையச் செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத அளவிற்கான கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


