வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக 4 பேர் கொலை.! சட்டம்,ஒழுங்கு மோசத்திற்கான சாட்சி - டிடிவி
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு பல்லடம் கொலை சம்பவமே உதாரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மது அருந்த எதிர்ப்பு- 4 பேர் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வீட்டின் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் திரு.பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலை, கொள்ளை அதிகரிப்பு
வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காகவே ரத்தினம்மாள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு தற்போது நடைபெற்ற கொலைச் சம்பவமும் உதாரணமாக அமைந்துள்ளது.
காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்