TTV Dhinakaran: நிர்வாக தோல்வியை மறைக்க பொதுமக்களின மீது சுமையை ஏற்றுவதா? டிடிவி தினகரன் கேள்வி
தமிழகத்தில் மீண்டும் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத் தோல்வியை மறைக்க பொதுமக்களின் மீது சுமையை ஏற்றும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது என தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போர் அடித்த தமிழ்நாடு போலீஸ்? இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கும் TTF? திருப்பதியில் வழக்கு பதிவு
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு; கடலூரை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.