Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் கடைகள் முன் கூட்டியே திறப்பு: மக்களை திரட்டி போராட்டம் - டிடிவி தினகரன் எச்சரிக்கை!

டாஸ்மாக் கடைகளை முன் கூட்டியே திறந்தால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

TTV Dhinakaran condemns tn govt on review to open tasmac shop earlier
Author
First Published Jul 11, 2023, 2:00 PM IST

தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மிலி பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நண்பகல் 12.00 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 90 மிலி பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டாலோ, டாஸ்மாக் கடைகளை முன் கூட்டியே திறந்தாலோ பொதுமக்களை திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. 

 

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் உரத்தக் குரல் எழுப்பிவரும் இச்சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும்.

கூலி வேலைக்கு செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா? ஏற்கனவே, தமிழ்நாட்டில் மது போதையினால் வேலைத்திறன் வெகுவாக குறைந்து வருவதை அரசு உணர்ந்துள்ளதா?

ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையதல்ல.

கோவையில் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

ஆகவே, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதும், மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மதுவிற்கு அடிமையானோரைக் கண்டறிந்து மறுவாழ்வு முகாம்களில் சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக இருக்கும்.

அதை விடுத்து, மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios