- Home
- Tamil Nadu News
- அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்ற உதிரிபாகங்களுடன் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தரம் குறைந்த சைக்கிள்களை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலவச சைக்கிள்களில் குறைபாடுகள்
“கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 11-ம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
ஆனால், இந்த சைக்கிள்கள் சரியாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் இப்படித் தரமற்ற உதிரிபாகங்களுடன் சைக்கிள்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார்?
“கடந்த ஆண்டுகளிலும் இது போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அவற்றைத் தாங்கள் சொந்த செலவில் பழுது பார்த்ததாகவும், பலர் அவற்றை விற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் இந்தக் குறைபாடு ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.
கோயம்புத்தூரில் இந்த ஆண்டு மட்டும் 17,782 மாணவர்களுக்குச் சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ரூ.4,300 மதிப்புள்ள சைக்கிள்கள் இப்படி அடிப்படைக் குறைபாடுகளைக்கூடச் சரிசெய்யாமல் வழங்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்த ஒப்பந்ததாரர்கள் யார்? ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடுமையான நடவடிக்கை வேண்டும்
கோயம்புத்தூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் வழங்கப்படும் அனைத்து இலவச சைக்கிள்களும் தரப் பரிசோதனை நடத்திய பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தரம் குறைந்த சைக்கிள்களை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

