இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார்... இந்த தம்பியின் மறுபக்கத்தை அண்ணாமலை இனி பார்ப்பார்- திருச்சி சூர்யா சவால்
என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. அண்ணாமலைக்கு பயமா? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சூர்யா நீக்கம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜக தலைவர்களை விமர்சனம் செய்த காரணத்தால் அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சமூகவலைதளத்தில் அண்ணாமலை, தமிழிசை தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக பாஜகவினர் மணல் மாபியாக்களிடம் வாங்கிய பணம் தொடர்பாக பட்டியலை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார்.
பாஜக வேண்டவே வேண்டாம்
இந்தநிலையில் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள மற்றொரு சமூகவலைதள பதிவில், உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம். என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன்.
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது
என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. அண்ணாமலைக்கு பயமா? அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.அதிகபட்சம் அமார் பிரசாதையும், கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.