TN BJP: மணல் கடத்தல் கும்பலிடம் 80 கோடி சுருட்டிய பாஜக? குண்டை தூக்கி போடும் திருச்சி சூர்யா
கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்ததற்காக பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட திருச்சி சூர்யா மணல் கடத்தல் கும்பலிடம் பணம் பெற்ற பாஜக பிரமுகர்களின் பெயர்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மை காலமாக தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்கள் மத்தியில் மாநிலத் தலைவருடன் மோதல் போக்கு இருந்து வந்ததாகவும், நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைவரும் அமைதி காத்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 2 மாநில ஆளுநர் பதிவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் தீவிர அரசியிலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று அறிவித்ததும் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இதனால் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அமைதியாக பார்த்து வந்த பாஜக மேலிடம், இனி கட்சியின் பொறுப்பில் இருந்து கொண்டு முன்னணி தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழிசை செளந்தரராஜனை நேரடியாகவும், வெளிப்படையாகவும் விமர்சித்த திருச்சி சூர்யா முதல் நபராக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட திருச்சி சூர்யா, “அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்.
இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்” என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு , மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே” என்று குறிப்பிட்டுள்ளார்.