திருச்சி மத்திய சிறையில் 1,200 விசாரணை கைதிகள், 600 தண்டனை கைதிகள் என மொத்தம் 1,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 10ம் வகுப்பு படித்து முடித்த தண்டனை கைதிகளுக்கு, 6 மாதகால ஐடிஐ, டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புக்காக பல்வேறு மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 105 பேர் தற்காலிகமாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 105 பேரும், தங்களுக்கு வேண்டிய அளவை விட குறைந்த அளவு உணவு வழங்கப்படுவதாக கூறி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்ததும், திருச்சி மத்திய சிறை சரக டிஐஜி ஜெயபாரதி, சிறைச்சாலைக்கு சென்று, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் சமரசம் ஏற்படவில்லை.
கைதிகள் உண்ணாவிரதத்தை திடீரென மேற்கொண்டது குறித்து விசாரித்தனர். அதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாகமணி, பேராட்சி ஆகியோர் கைதிகளை தூண்டி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது தெரிந்தது.
இதையடுத்து, கைதி விசாகமணியை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், கைதி பேராட்சியை சென்னை புழல் சிறைக்கும் நேற்று அதிகாலை அதிரடியாக இடமாற்றம் செய்தனர்.
நேற்று தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் டிஐஜி ஜெயபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், போதிய உணவு வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கைதிகள், நேற்று மதியம் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
