- Home
- Tamil Nadu News
- தை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
தை மாத பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு சூப்பர் அறிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே
திருவண்ணாமலையில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ள தை மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த மெமு சிறப்பு ரயில், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே இயக்கப்படும்.

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய ஸ்தலமாக மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கக்கூடியது.
இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் தை மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் பிப்ரவரி 1ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே வருகிற 1ம் தேதி 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
விழுப்புரத்தில் இருந்து 1ம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்பும் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

