பிரிவினையை தூண்டும் பிரதமர் மோடி; தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - துரை வைகோ காட்டம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி உறுதியாகிவிட்டதாக திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்

Trichy candidate Durai Vaiko has said that BJP will lose in the loksabha elections 2024 smp

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு சென்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை வைகோ அங்கு சிசிடிவிக்கள் கண்காணிப்பு அறையை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு பணியில் இருக்கும் மதிமுகவினரிடம் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் எந்த குறையும் இல்லை, சிசிடிவிகளும் சரியாக இயங்குகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்றார்.

“பிரதமருகுள்ளான தகுதியோடு பிரதமர் மோடியின் செயல்பாடுகளும் பேச்சும் இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பிரிவினையை தூண்டும் வகையிலும், ஜாதி, மதங்களை வைத்தும் வாக்கு சேகரிக்கும் வகையிலும் பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை எந்த இந்திய பிரதமரும் இது போல் பிரசாரம் செய்ததில்லை.” என துரை வைகோ குற்றம் சாட்டினார். ஜாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என விதிமுறைகள் இருக்கும் பொழுதும் பிரதமர் மோடி தொடர்ந்து அவ்வாறு பிரசாரம் செய்து வருவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள போதும், பிரதமர் நரேந்திர மோடி மீது எந்தவித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. பாஜக கட்சிக்கு அவர்கள் நோட்டீஸ் மட்டுமே அனுப்பி உள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி இது போல் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் இதுவரை கூறவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாகத்தான் செயல்படுகிறது. என தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம் அதற்கு ஒரு உதாரணம் தான் இதுவும்.” என்றார்.

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!

“தென்னக ரயில்வேயில் பணியாற்றும் பிற மாநிலத்தவர் எந்த மாநிலத்தில் பணியாற்றுகிறார்களோ அந்த மாநிலத்தின் மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒன்றிய அரசின் துறைகளில் தமிழ்நாட்டில் அதிக அளவு வட மாநிலத்தவர் தான் பணியாற்றுகிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஒன்றிய அரசின் வேலைகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வடமாநில மக்களை தமிழ்நாட்டில் திணிப்பதாகதான் இது உள்ளது. வடமாநிலத்தவர் தமிழை கற்றுக் கொள்வதை விட தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பணியமர்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.” என துரை வைகோ வலியுறுத்தினார்.

மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்தியா கூட்டணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் விரத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் ஜாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். பொய்களை பரப்புகிறார்கள் என துரை வைகோ சாடினார்.

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை திரித்து தவறான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருகிறார்கள். பாஜகவிற்கு தோல்வி உறுதியாக விட்டது தோல்விக்கான காரணங்களை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் சாடினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. டெல்லி மக்கள் அவரை மிகச் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அந்த வரவேற்பு பாஜக அரசை கண்டிக்கும் விதமாக இருந்தது. சிறையில் இருந்து வெளியே வந்து மிகவும் வீரியத்துடன் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது இந்தியா கூட்டணிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எழுச்சியை தந்துள்ளது என துரை வைகோ கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios